தஞ்சை வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-தி.மு.க. பயங்கர மோதல் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-04-18 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் 6 மணி ஆகியும் கூட்டம் இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் வாக்களித்தனர்.

தஞ்சை கீழவாசல் ஆடக்காரத்தெரு பகுதியில் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிவடையும் தருவாயில் அங்கு இருந்த அ.தி.மு.க. வேட்பாளரின் பூத் ஏஜெண்டு இரட்டை இலை சின்னத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பூத் ஏஜெண்டு வெளியே வந்து அ.தி.மு.க.வினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அ.தி.மு.க.வினர் சிலர் அங்கு வந்தனர். அப்போது வாக்குச்சாவடியில் இருந்த தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றி மோதலாக மாறியது.

இதில் தி.மு.க.வை சேர்ந்த அமிர்தராஜ் என்பவரின் மண்டை உடைந்தது. மேலும் கருணாநிதி முகத்திலும், செந்தில்குமாருக்கு கை, கால், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க.வினரும் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் இருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து போலீசாரும் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் காயம் அடைந்த தி.மு.க.வை சேர்ந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தரப்பிலும், அ.தி.மு.க. தரப்பிலும் தனித்தனியே புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு வாக்குச்சாடி முன்பு வாக்குப்பதிவு முடிவடையும் தருவாயில் அரசியல் கட்சியினர் திரண்டு இருந்தனர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மேலும் செய்திகள்