ரெட்டியார்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அதிகாரிகள் தொடர் நடவடிக்கை

ரெட்டியார்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை அதிகாரிகள் நேற்று தொடர்ந்தனர்.

Update: 2019-04-30 23:19 GMT

மூலக்குளம்,

புதுவை நகரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய கலெக்டர் அருண் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 22–ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளது? அதை எப்போது எடுப்பது? என்பது தொடர்பான பட்டியலை தயாரித்து ஆக்கிரமிப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர். அதன்பிறகும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படுகின்றன.

இதன் முதல்கட்டமாக கோரிமேட்டில் ஜிப்மர் எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் நொறுக்கி அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வியாபாரம் நடத்தி வந்தவர்கள் கடும் நஷ்டமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ள பகுதியில் முன்கூட்டியே அதிகாரிகள் சென்று அதுபற்றிய விவரங்களை தெரிவித்து வியாபாரிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

இந்தநிலையில் நேற்று இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் வந்தனர். பாதுகாப்புக்காக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே வியாபாரிகள் பலரும் தாங்களாகவே தங்கள் கடை முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டனர். மேற்கூரைகளையும் பிரித்துவிட்டனர். ஒரு சில இடங்களில் கட்டப்பட்டிருந்த சுவர்களையும், சிமெண்டு தரைகளையும் அதிகாரிகள் பொக்லைன் உதவியுடன் அகற்றினார்கள்.

புஸ்சி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நாளை (வியாழக்கிழமை) அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவதாஸ் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தார்.

மேலும் செய்திகள்