வதந்திகளை நம்பவேண்டாம்: பானி புயலால் புதுச்சேரிக்கு பாதிப்பில்லை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

பானி புயலால் புதுச்சேரிக்கு பாதிப்பில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2019-04-30 23:22 GMT

புதுச்சேரி,

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த மாதம் 25–ந் தேதி உருவான ‘பானி’ புயல் முதலில் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் தற்போது சென்னை அருகே மையம் கொண்டு இருந்தாலும், அது திசை மாறி ஒடிசா மாநிலம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 60 கி.மீ. வேகத்துக்கு காற்று இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. அப்போது கடலோர மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை மற்றும் இதர நிவாரண பணிகளில் ஈடுபடும் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதில் புதுவை தலைமை செயலாளர், வளர்ச்சி ஆணையர், கலெக்டர் ஆகியோரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டனர்.

இந்த புயலினால் புதுச்சேரி பாதிக்கப்படாது. எனவே பானி புயல் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். புயல் குறித்த உண்மையான நிலவரங்களை அறிந்துகொள்ள 1070 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

இருப்பினும் அனைத்து அவசர உதவிக்கான குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்