பிரசவத்தின்போது ஆண் குழந்தை இறந்ததால், அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் - மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடி அரசு மருத்துவமனையில், பிரசவத்தின்போது ஆண் குழந்தை இறந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-07 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கட்டையடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி நிஷாந்தி(வயது 25). இவர், மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு நிஷாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த உறவினர்கள், மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் டாக்டரையும் வரவழைக்குமாறு உறவினர்கள், செவிலியர்களிடம் கூறினார்கள். ஆனால் பிரசவம் பார்க்க டாக்டர் உடனடியாக வரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பணியில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்க்க தொடங்கினர். இதனிடையே தாமதமாக வந்த பெண் டாக்டர் ஒருவர், பிரசவ அறைக்கு சென்று நிஷாந்திக்கு பிரசவம் பார்த்தார். இந்த நிலையில் நிஷாந்திக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனால் நிஷாந்தியின் கணவர் மகேஷ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுதொடர்பாக மன்னார்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் மகேஷ் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி நிஷாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்ட தகவலை செவிலியர்கள், டாக்டருக்கு தெரியப்படுத்திய பின்னர் உடனடியாக அங்கு டாக்டர் வரவில்லை. இதனால் செவிலியர்களே பிரசவம் பார்க்க தொடங்கினர். நீண்ட நேரம் கழித்தே டாக்டர் அங்கு வந்தார். டாக்டர் வர தாமதமானதால்தான் குழந்தை இறந்து விட்டதாக மகேஷ் கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மகேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், மகேஷ் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசார் மருத்துவமனை கண்காணிப்பாளர் பரிமளாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெண் டாக்டர் போலீசார் முன்பாக நேரில் ஆஜராகி, தான் பிரசவம் பார்க்க வந்தபோது, குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் உடல் மட்டும் வரவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறினார். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத நிஷாந்தியின் உறவினர்கள், மன்னார்குடி டவுன் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்