கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் மூலம் 1,462 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர் அதிகாரி தகவல்

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. அதன் மூலம் 1,462 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2019-05-10 21:30 GMT
கரூர், 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா? என்பதை கண்காணிக்கின்றனர். அப்போது ஓட்டுனர் தேர்வு தள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பாரபட்சம் காட்டாமல் நுணுக்கமாக விதிமுறைப்படி வாகனம் ஓட்டுபவர்களை ஓட்டுனர் உரிமம் வழங்க தேர்வு செய்து ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றனர்.

அந்த வகையில் கரூர் வட்டார போக்குவரத்துதுறை அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. வாகனத்தை இயக்கி காண்பிக்கும் போது சிறிய தவறு செய்தாலே, உடனடியாக வாகனம் ஓட்ட தகுதியுடையவராக இல்லை என நிராகரித்து, மறுதேர்வுக்கு வருமாறு அனுப்பி வைக்கப்படுவதால், வழக்கத்தை விட ஓட்டுனர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் குறைந்திருக்கிறது. கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு ஓட்டுனர் உரிமம் பெற 2,270 பேர் விண்ணப்பித்ததில், கணினிமயமாக்கப்பட்ட தேர்வு தளம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு 1,462 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் தங்களது திறமையை மேம்படுத்தி மீண்டும் வாகனத்தை இயக்கி காண்பித்து ஓட்டுனர் உரிமம் பெற்று வருகின்றனர் என கரூர் வட்டார போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகப்படியான வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வட்டார போக்குவரத்து துறையின் வேலையை எளிமையாக்குவது, பாரபட்சம் காட்டாமல் ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே கரூரில் சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகள் பலரும் இங்கு வந்து ஓட்டுனர் உரிமம் பெறுவது கடினமானதாக இருக்கும் என நினைத்து பலர் வெளி மாவட்டங்களுக்கு ஓட்டுனர் உரிமம்பெற செல்வதாக கூறப்படுகிறது.

எனினும் தமிழகத்தில் மேலும் 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க ஏற்பாடுகள் நடந்தன. எனவே அதனை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்போவது எப்போது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூரில் இருசக்கர வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன விற்பனை செய்யும் இடங்களில் ஹெல்மெட்டுடன் வாகனத்தை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய ஹெல்மெட்டை கொண்டு வந்து காட்டிய பிறகு தான், புதிய இருசக்கர வாகனங்களை பதிவு செய்து அனுமதி கொடுக்கிறோம். சமீபத்தில் இருசக்கர வாகன விபத்துக்களில் இளைஞர்கள் உயிரிழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. எனவே மிதவேகத்துடன் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டும் மனநிலைக்கு இளைஞர்கள் உள்ளிட்டோர் வர வேண்டும். ஒரு முறை உயிர் பிரிந்து விட்டால், மீண்டும் உலகை காண முடியாது என்பதை உணர்ந்து சாலையில் செயல்பட வேண்டும். கரூரில் நடந்த விபத்து சம்பவங்களை தொகுத்து விரைவில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என கரூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்