காட்பாடியில் கோவில் திருவிழா தகராறில் கோஷ்டி மோதல் 29 பேர் மீது வழக்கு

காட்பாடியில் கோவில் திருவிழா தகராறில் கோஷ்டி மோதல் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-13 22:15 GMT

காட்பாடி, 

காட்பாடி வசந்தம் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 11–ந் தேதி திருவிழா நடந்தது. அன்று இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி, செல்லக்குட்டி, சூர்யா உள்பட 25 பேர் நடனமாடி உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை காட்பாடி கணக்கர் தெருவை சேர்ந்த முருகன், ராஜா உள்பட 4 பேர் தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் தண்டபாணி ஆதரவாளர்களுக்கும், முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் முருகன் உள்பட 4 பேருக்கும், மற்றொரு தரப்பில் பழனி உள்பட 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தண்டபாணி தரப்பை சேர்ந்த 25 பேர் மீதும், முருகன் தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்