ராமநத்தம் அருகே, தண்ணீர் தேடிவந்த மான் கிணற்றில் தவறி விழுந்து சாவு

ராமநத்தம் அருகே தண்ணீர் தேடி வந்த மான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

Update: 2019-05-15 22:30 GMT
ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த லக்கூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக குடிநீர் தேடி மான்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் நேற்று மான் ஒன்று தண்ணீர் தேடி லக்கூர் கிராமப்புற பகுதிக்கு வந்தது. இதை பார்த்த நாய்கள், மானை துரத்தின. இதில் தப்பி ஓடிய மான், அங்குள்ள ஒரு திறந்த வெளி கிணற்றில் தவறி விழுந்தது.

சுமார் 50 அடி ஆழ கிணற்றில் மான் விழுந்ததை பார்த்த அந்த பகுதியினர், இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், தவறி விழுந்த மான் காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் கயிறுகட்டி அதை மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அந்த மான் நாங்கூர் காப்பு காட்டில் புதைக்கப்பட்டது.

காப்புக்காட்டில் தற்போது குடிநீர் இல்லாததால், இதுபோன்று மான்கள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நேரிடுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் காப்பு காட்டில் தேவையான இடங்களில் தொட்டி அமைத்து, தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்