திருச்சியில் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 7 பேர் கைது

இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசிய நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அகில பாரத இந்துமகா சபா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2019-05-15 22:45 GMT
மலைக்கோட்டை,

இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசிய நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அகில பாரத இந்துமகா சபா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை அந்த கட்சியின் மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள் சிந்தாமணி அண்ணாசிலை வந்தனர்.

முன்னதாக அங்கு போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்றும், அப்படி மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதற்கிடையே அங்கு நின்ற காரில் இருந்து ஒருவர், கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிப்பதற்காக தூக்கி வந்தார். உடனே போலீசார் அவரிடம் இருந்து உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஆனது. இதையடுத்து உருவபொம்மையை பறித்து கொண்டு ராஜசேகர் உள்பட நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அனைவரும் அருகே இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, இரவில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் அகில பாரத இந்து மகாசபா மாநில துணைத்தலைவர் கங்காதரன், பொருளாளர் ராகவன், திருச்சி மாவட்ட தலைவர் மகேஷ், துணைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் ஞானசேகர் உள்ளிட்டோர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து நேற்று மாலை கூரியர் மூலம் பெண்களின் உள்ளாடைகளை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்