விபத்தில் தாய்-மகள் பலி: நாகர்கோவில் கேப் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தாய்- மகளை பலி கொண்ட நாகர்கோவில் கேப் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை வருமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2019-05-16 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலை அடுத்த மேலசங்கரன்குழி சாந்தபுரத்தை சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (வயது 49). ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக உள்ளார். நாககிருஷ்ணமணி தன்னுடைய மகள் ஸ்ரீபத்மபிரியாவை, பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக தனது மனைவி சுதாவுடன் நாகர்கோவில் வந்தார்.

பள்ளியில் சேர்க்கையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டுக்கு சென்றனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் சென்ற போது சாலையோரம் நிறுத்தி இருந்த காரின் கதவை டிரைவர் திடீரென திறந்தார். அந்த கதவில் நாககிருஷ்ணமணி மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சுதா, ஸ்ரீபத்மபிரியா ஆகியோர் மீது மினிபஸ் ஏறி இறங்கியது. இதில் தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். நாககிருஷ்ணமணியும் காயம் அடைந்தார்.

சென்னை பதிவெண் கொண்ட கார்

இச்சம்பவம் தொடர்பாக மினி பஸ் டிரைவரான புத்தளம் அருகே கல்லடிவிளையை சேர்ந்த சுகுமாரன் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் நிறுத்தி இருந்த கார் சென்னை பதிவெண் கொண்டது என்பது தெரிய வந்தது.

அந்த காரின் கதவை திறந்த டிரைவரின் உருவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபரின் உருவம் தெளிவானதாக இல்லை. எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கேமராவில் சிக்கிய காரின் பதிவெண் மூலம் டிரைவரை பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே விபத்தில் பலியான தாய்- மகளின் உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போக்குவரத்து மிகுந்த கேப் ரோடு

தாய்- மகளை பலி கொண்ட கேப் ரோடானது நாகர்கோவில் நகரின் மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலை குறுகலாக உள்ளதால் ஒருவழிப்பாதையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் இந்த சாலையில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருக்கும். இதுதவிர ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும்.

அப்படி நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும், சிறு சிறு விபத்துகளும் நடப்பது உண்டு. இந்தநிலையில்தான் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கதவு திறக்கப்பட்ட போது நடந்த விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனங்களுக்கு தடை வருமா?

இனியாவது போக்குவரத்து போலீசார் விழித்துக் கொண்டு கேப் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே கேப் ரோட்டில் சாலையோரம் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதித்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எனவே கேப் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்