குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுவதை கண்டித்து மின்வாரிய அலுவலக வளாகத்தில் நூதன போராட்டம்

குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுவதை கண்டித்து மின்வாரிய அலுவலக வளாகத்தில் நூதன போராட்டம் நடத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-17 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் கோனேரி பாளையம் கிராமம் அருகே உள்ள முத்துநகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கோனேரிபாளையம் விவசாய நிலத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மின்மாற்றியில் இருந்து விவசாய நிலங்களுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுவதால், முத்துநகருக்கு குறைந்தழுத்த மின்சாரமே கிடைக்கிறது. இதனால் வீட்டில் மின் மோட்டார், டி.வி., வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை இயக்க முடியவில்லை. இயக்கினால் பழுதாகி விடுகிறது. மேலும் இரவில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே முத்துநகர் பகுதியில் ஒரு மின்மாற்றி அமைத்து, அதில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மதியம் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெரம்பலூர் மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்துக்கு வந்து நூதன போராட்டமாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மேகலா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென் றனர்.

மேலும் செய்திகள்