மூளைச்சாவு அடைந்த காரைக்குடி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்

மூளைச்சாவு அடைந்த காரைக்குடி பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Update: 2019-05-18 21:30 GMT
சென்னை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஜான் கிளாரா (வயது 50). இவர் மூளையில் ரத்தக்குழாய் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ஜான் கிளாரா கடந்த மாதம் 24-ந்தேதி சென்னையை அடுத்த போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஜான் கிளாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி ஜான் கிளாரா மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய கணவர் சவரி முத்து, மகன் ஆண்டனி அருள் கஸ்பர், மகள் அன்னை தெரசாள் ஆகியோர் பெருந்தன்மையுடன் ஜான் கிளாராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

5 பேர் மறுவாழ்வு

ஜான் கிளாராவின் கணவர் மற்றும் பிள்ளைகள் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து, அவருடைய உடல் உறுப்புகள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டன. அதன்படி கல்லீரல் ஸ்ரீராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டெல்லியை சேர்ந்தவருக்கு, டாக்டர் முகமது ரேலா மற்றும் அவருடைய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர்.

இதேபோல சிறுநீரகம் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், இதயம் மற்றும் வலது நுரையீரல் போர்ட்டிஸ் மலர் ஆஸ்பத்திரிக்கும், நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக தானமாக அளிக்கப்பட்டது. ஜான் கிளாராவின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்