வேடசந்தூர் அருகே, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி - கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியல்

வேடசந்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார். மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-18 22:45 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மாணிக்கம் (வயது 29). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மாணிக்கத்தின் வீட்டருகே ரவிமுருகன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இவரது வீட்டில் வயரிங் செய்யும் பணியில் மாணிக்கம் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வயரிங் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நேற்று காலை வீட்டை பார்க்க ரவிமுருகன் சென்றார். அப்போது மாணிக்கம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்த மாணிக்கத்தின் உறவினர்கள், மின்சாரம் பாய்ச்சி மாணிக்கம் கொலை செய்யப்பட்டதாக கூறி கோவிலூரில் திண்டுக்கல்-கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட மாணிக்கத்தின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்