ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்

“ஆடம்பரமாக திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததாலும், தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதாலும் 3 பேரையும் கொன்றேன்” என்று கைதான கோவர்த்தனன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-05-18 23:45 GMT
திண்டிவனம்,

திண்டிவனத்தில் ராஜி, கலைச்செல்வி மற்றும் கவுதம் ஆகியோர் கடந்த 15-ந் தேதி அதிகாலையில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் கோவர்த்தனனின் மனைவி தீபகாயத்ரி நேற்று கைது செய்யப்பட்டனர். 3 பேரையும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து கோவர்த்தனன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் எம்.ஏ. மற்றும் ஆசிரியர் பயிற்சி படித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன். பின்னர் மல்லியப்பன் தெருவில் கே.ஆர்.ஜி. என்ற பெயரில் டியூசன் சென்டர் நடத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே 2 கார்களை வாங்கி, டிராவல்ஸ் நடத்தி வருகிறேன். அதிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே பெற்றோரிடம் பணம் வாங்கி, செலவு செய்தேன்.

சிறுவயதில் இருந்தே தம்பி கவுதமைத்தான் எனது பெற்றோருக்கு ரொம்ப பிடிக்கும். அவன் எதை கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார்கள். என்னை கண்டுகொள்ளாமல், உதாசீனப்படுத்தினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனக்கும், தீபகாயத்ரிக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தினார்கள்.

தம்பி கவுதமுக்கும், திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக பெரிய திருமண மண்டபத்தை பதிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த பெற்றோர் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். மேலும் குடும்பத்தில் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் என்னை விட, தம்பிக்குத்தான் அதிக சொத்து கொடுக்கப்போவதாக பெற்றோர் கூறி வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பெற்றோர் மற்றும் தம்பியால் எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று எண்ணினேன். மேலும் 3 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதற்காக 3 காலி மதுபாட்டில்களையும், பெட்ரோலையும் வீட்டிற்கு வாங்கி வந்தேன். வீட்டில் வைத்தே பெட்ரோல் குண்டு தயார் செய்தேன். வழக்கம்போல் கடந்த 14-ந் தேதி இரவு சாப்பிட்டு விட்டு பெற்றோர் மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் ஒரே அறையில் தூங்கச்சென்றனர். அதிகாலை 2.30 மணிக்கு நான் எழுந்து, பெற்றோரின் அறைக்கதவை திறந்தேன். அங்கு 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

உடனே நான் 3 பெட்ரோல் குண்டுகளையும் எடுத்து வந்தேன். ஒரு பெட்ரோல் குண்டில் மட்டும் தீ வைத்து, அந்த அறைக்குள் வீசினேன். அது சத்தத்துடன் வெடித்து, தீப்பற்றி எரிந்தது. உடனே மற்ற 2 பெட்ரோல் குண்டுகளையும் அறைக்குள் வீசிவிட்டு, கதவை இழுத்து மூடி வெளிப்புறமாக பூட்டினேன். அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளும் வெடித்தது.

இதில் எனது தந்தை ராஜி மட்டும் தப்பித்து, பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடி வந்து வரண்டாவில் நின்று காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கதறினார். உடனே நான் ஓடிச்சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினேன்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை தொடர்ந்து அந்த அறையை திறந்து பார்த்தேன். அங்கு எனது தாயும், தம்பியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

3 பேரும் இறந்ததை உறுதி செய்து கொண்ட பிறகு காலை 5.30 மணிக்கு திண்டிவனம் தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறினேன். உடனே அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது நான், மின் கசிவின் காரணமாக ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பெற்றோர் மற்றும் தம்பி இறந்து விட்டதாகவும் கூறி நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்