கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள்

கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை கூற வேண்டாம் என்று காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு தினேஷ் குண்டுராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-05-19 21:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சி களின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். சமீபகாலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா மீண்டும் முதல்- மந்திரியாக வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி பதிலடி கொடுத்தது. அக்கட்சியின் தலைவர் எச்.விஸ்வநாத், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறுவது சரியல்ல, அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது எந்த சாதனையும் செய்யவில்லை என்று கூறினார்.

சித்தராமையா மற்றும் எச்.விஸ்வநாத் இடையே எழுந்த இந்த மோதல், கர்நாடக கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த முக்கியமான சூழ்நிலையில் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் கூற வேண்டாம். நமது முக்கியமான நோக்கம், மத்தியில் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது ஆகும். அதன் மீது நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

வருகிற 23-ந் தேதி மத்தியில் மதசார்பற்ற வளர்ச்சியை முன்னிறுத்தும் அரசு அமையும். பா.ஜனதா அரசை விரும்பாத அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம். கூட்டணியாக செயல்பட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். அதை நாம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்