அரசு அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை-ரூ.1½ லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கவுந்தப்பாடி அருகே அரசு அதிகாரியின் வீடு புகுந்து 6 பவுன் நகை-ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-19 22:15 GMT
கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 77). இவர் கால்நடைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 14-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பேரனின் திருமண விழாவுக்காக செங்கோட்டையன் தன்னுடைய குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை செங்கோட்டையனின் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி செங்கோட்டையனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். மேலும் இதுபற்றி கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நகை-பணம் கொள்ளை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். மேலும் அங்கு செங்கோட்டையனும் வந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பீரோ திறந்து கிடந்ததோடு, அதில் வைக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து துணிகரமாக நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண்ணிடம் நகை பறிப்பு

இதேபோல் அதே பகுதியில் மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல். இவருடைய மனைவி தீபா (26). நேற்று முன்தினம் இரவு தீபா மற்றும் அவரது பெற்றோர் சின்னப்பன், பார்வதி ஆகியோர் வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். செங்கோட்டுவேல் வீட்டின் உள்ளே ஒரு அறையில் தூங்கினார். அப்போது வீட்டு வாசலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் தீபா கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, “திருடன்.... திருடன்....” என்று சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தீபா, கவுந்தப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்