கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை, பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்காது - சிதம்பரத்தில் திருமாவளவன் பேட்டி

கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை எனவும், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்காது என்றும் சிதம்பரத்தில் திருமாவளவன் கூறினார்.

Update: 2019-05-20 22:30 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் வந்தார். அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு திருமாவளவன் மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய அளவில் வெளியாகி இருக்கின்றன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது. பொதுவாக கருத்துக்கணிப்புகளில் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. சில வகை நிறுவனங்கள் இந்த மாதிரியான கருத்துக்கணிப்புகளை அரசியல் நோக்கத்தோடும், பொருளியல் நோக்கத்தோடும் வெளியிட்டு வருவதை நாம் அறிவோம்.

தமிழக மக்களுடைய நாடியை பிடித்து பார்க்கிற வகையில் களத்தில் பணியாற்ற கூடியவர்கள் நம் கட்சியினர். தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மீது வெறுப்படைந்த, அதிருப்தி அடைந்த மக்கள், அவர்களுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இல்லை. அகில இந்திய அளவில் இதே போன்ற மனநிலை மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாகிவிடும். தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே வேதாந்தா நிறுவனத்திற்கு மோடி அரசு உரிமையை வழங்கி விட்டது. கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து மக்களை திரட்டி மக்களோடு, மக்களாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பால.அறவாழி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் சிதம்பரம் செல்லப்பன், கடலூர் தாமரைசெல்வன், தேர்தல் பொறுப்பாளர்கள் சிதம்பரம் பாலாஜி, காட்டுமன்னார்கோவில் விடுதலை செழியவன், நந்தன், செய்தி தொடர்பாளர் திருவரசு, மாவட்ட துணை செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்