சாத்தூர் சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க. தக்கவைத்தது - 456 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜவர்மன் வெற்றி

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்கவைத்துக் கொண்டது. 456 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ராஜவர்மன் வெற்றி பெற்றார்.

Update: 2019-05-23 23:00 GMT
சாத்தூர்,

2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிர்கோட்டை சுப்பிரமணியன் பின்னர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரானார். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த மாதம் 18-ந்தேதி சாத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (அ.தி.மு.க.), கோசுகுண்டு சீனிவாசன் (தி.மு.க.), சுந்தரராஜ் (மக்கள் நீதி மய்யம்), சுப்புராஜ் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி), சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) உள்பட மொத்தம் 30 பேர் போட்டியிட்டனர். இதில் ஆண் வாக்காளர்கள் 87 ஆயிரத்து 214 பேரும், பெண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 411 பேரும், திருநங்கைகள் 2 பேரும் வாக்களித்தனர். மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 627 வாக்குகள் பதிவானது. இது 76.73 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

இந்த நிலையில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்து முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

முதல் சுற்றில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஒரு சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால், மற்றொரு சுற்றில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றார். 15-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் 3,292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 20-வது சுற்று முடிவில் 1133 என வாக்கு வித்தியாசம் குறைந்தது. இருந்தாலும் 21 சுற்று முடிவில் 456 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் வெற்றி பெற்றார்.

சாத்தூர் தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-

1. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்(அ.தி.மு.க.)- 76,977

2. சீனிவாசன்(தி.மு.க.)- 76,521

3. எஸ்.ஜி.சுப்பிரமணியன்(அ.ம.மு.க.)- 12,511

4. சுந்தரராஜ்(மக்கள் நீதி மய்யம்)-3,934

5. சுரேஷ்குமார் (நாம் தமிழர்)-5042

6. எஸ்.சுப்புராஜ் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி)- 258

7. ஜெயராஜ்(சுயே) - 97

8. சேவுகன்(சுயே) - 93

9. கு.ராஜேந்திரன்(சுயே)- 101

10. மாரிக்கண்ணன்(சுயே) - 63

11. ரா.சங்கர்(சுயே)- 96

12. மு.சீனிவாசன்(சுயே)- 192

13. இசக்கிமுத்து(சுயே)- 145

14. மன்மதன்(சுயே)- 60

15. ரா.சீனிவாசன்(சுயே)- 194

16. க.சுப்பிரமணியன்(சுயே)- 491

17. ஆர்.சுப்பிரமணியன்(சுயே)- 78

18. ஆர். சுப்பிரமணியன்(சுயே)- 174

19. கொ.சீனிவாசன்(சுயே)- 208

20. எஸ்.சுப்பிரமணியன்(சுயே)- 444

21. சிவன்ராஜ்(சுயே)- 1406

22. ஆனந்தராஜ்(சுயே)- 203

23. விஸ்வநாத்(சுயே)- 129

24. பூ.சீனிவாசன்(சுயே)- 208

25. பா.முனியசாமி(சுயே)- 163

26. சி.போஸ்பாண்டியன்(சுயே)- 133

27. கொ.சீவல்ராஜ்(சுயே)- 353

28. தர்மலிங்கம்(சுயே)- 456

29. கே.சுப்பிரமணியன்(சுயே)- 363

30. சா.ராஜா(சுயே)- 105

நோட்டா- 1728

தபால் வாக்குகளில் தி.மு.க. வேட்பாளர் கோசுகுண்டு சீனிவாசனுக்கு 802 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனுக்கு 157 ஓட்டுகளும் கிடைத்தன.

வாக்கு எண்ணிக்கையின்போது, 11-வது மேஜையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை திறந்ததும் அது பழுதாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தெரியவில்லை. இதைதொடர்ந்து அந்த வாக்குப்பதிவு எந்திரத்தை அப்படியே மூடி வைத்தனர். அனைத்து சுற்றுகளும் முடிந்த பின்னர் கடைசியாக அந்த வாக்குப்பதிவு எந்திரம் மீண்டும் திறக்கப்பட்டு எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி பழுது சரி செய்யப்பட்டு, அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் கடைசியாக எண்ணப்பட்டது.

மேலும் செய்திகள்