ஆடி அமாவாசை: கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் நீராடினர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் நீராடினர். அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Update: 2019-07-31 22:45 GMT
கன்னியாகுமரி,

ஆடி அமாவாசையன்று இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசையான நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக நேற்று அதிகாலை 2 மணி முதலே கன்னியாகுமரி கடற்கரையில் குவிய தொடங்கினர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவை சேர்ந்தவர்களும் வந்து இருந்தனர்.

அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினர். பிறகு கடற்கரையில் புரோகிதர்கள், வேத விற்பனர்கள் மூலம் பலிகர்ம பூஜை நடத்தினர். பச்சரிசி, எள், பூ, தர்ப்பைப்புல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு பூஜை பொருட்களை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் புனித நீராடினர்.

தொடர்ந்து ஈரத்துணியுடன் கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டனர். ஆடி அமாவாசையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்குள் நிர்மால்ய பூஜை, அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீபலி பூஜை, நைவேத்திய பூஜை, உச்சி கால பூஜை தீபாராதனை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் முடிக்கப்பட்டன.

பின்னர் கோவிலின் வடக்கு வாசல் பிரதான நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

மேலும் பகவதி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு இருந்தது. இரவு 8 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா நடந்தது.

நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு பகவதி அம்மன் கோவில் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் செய்திருந்தனர்.

பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலுக்குள்ளும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்தனர். 10 நீச்சல் வீரர்கள் கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை முதல் ஏராளமானோர் பலிகர்மம் நிறைவேற்றினார்கள். இதற்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் சிறப்பாக பந்தல் போடப்பட்டிருந்தது.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்