தேசிய மாணவர் படைக்கு மாஸ்டரை நியமிக்கக்கோரி, வகுப்பை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் - விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு மாஸ்டரை நியமிக்கக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-31 22:45 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் தேசிய மாணவர் படை என்ற அமைப்பில் 35 மாணவர்கள் சேர்ந்து பல்வேறு முகாம்களில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றதாக தெரிகிறது. அதன் பிறகு மாணவர்களுக்கு நடக்க இருந்த 2 பயிற்சி முகாம்கள் நடைபெறவில்லை.

3-வது பயிற்சி முகாமும் நடைபெறவில்லையெனில் தேசிய மாணவர் படை கலைக்கப்படும் என்பதால், புதிதாக மாஸ்டரை நியமித்து தேசிய மாணவர் படையை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தேசிய மாணவர் படை அமைப்பு கலைக்கப்பட போவதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்து ஆத்திரமடைந்த தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்து வந்த கல்லூரி முதல்வர் முகுந்த குமாரி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விதிமுறைகளின்படி 40 வயதுக்கு உட்பட்ட பேராசிரியர் ஒருவரை மாஸ்டராக பணியமர்த்த வேண்டும். அதற்கு தகுதியாக கல்லூரியில் 2 பேர் மட்டுமே உள்ளதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதனால் விரைவில் மாஸ்டர் நியமிக்கப்படுவார் என்றார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்