காங்கிரஸ் பலவீனத்தால் பாகிஸ்தான் அழுகிறது - பிரதமர் மோடி

இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-05-02 08:57 GMT

அகமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத்தில் மே.7-ம் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

நான் குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் நாம் புதிய சாதனை படைப்போம்.இந்த தேர்தலில் ஆனந்த் மற்றும் கெடா மாவட்ட மக்கள் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார்கள். 2014-ல் நீங்கள் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும்போது குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது. நாட்டுக்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

எனக்கு ஒரே ஒரு கனவு இருக்கிறது. 2047ல் நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக இருக்க வேண்டும் என்பதே எனது கனவு.2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24 மணிநேரமும் உழைப்பேன் என்பது எனது உத்தரவாதம். 10 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தோம். காங்கிரஸ் கட்சியோ 60 ஆண்டுகளில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே கொடுத்தது.

இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுகிறது. தற்போது காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது.

பாகிஸ்தானை பின்பற்றும் ரசிகனாக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசை பாராட்டுகிறார். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு தற்போது முற்றிலும் அம்பலமாகி உள்ளது. 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க பலவீனமான காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

இந்தியா கூட்டணி அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது. 

ஒருபுறம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி, மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. அவர்களது எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்