வீட்டுமனை தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்தவர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-07 23:00 GMT
விழுப்புரம்,

சென்னை வளசரவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடா என 18 இடங்களில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பாப்பா ராஜேந்திரன், அவரது மனைவி தேவி மற்றும் பாப்பா ராஜேந்திரனின் தம்பியான சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் ராஜதுரை (46) ஆகிய 3 பேரும் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தின் கிளை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கியது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சென்று வீட்டுமனை விற்பனை திட்டம் நடத்துவதாகவும், இத்திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அந்த நிறுவனத்தில் வீட்டுமனை விற்பனை திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர். முழு தவணை தொகையையும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்காமல் பணத்தை மோசடி செய்துள்ளதோடு நிறுவனத்தையும் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இந்த மனுவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் பிருந்தா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 500 பேர் பணம் கட்டியுள்ளதும், இதன் மூலம் அந்த நிறுவனத்தினர் ரூ.1 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 495-யை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பாப்பா ராஜேந்திரன், தேவி, ராஜதுரை ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பாப்பா ராஜேந்திரன் திடீரென இறந்து விட்டார். அவரது மனைவி தேவி, ராஜதுரை ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராஜதுரை விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள தேவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்