விழுப்புரம் பகுதிகளில், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

விழுப்புரம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-11 22:30 GMT
விழுப்புரம்,

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் அடுத்த மாதம் 2-ந் தேதி (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்.

இதையொட்டி கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான கைவினை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், குதிரை விநாயகர், பாகுபலி விநாயகர், கருடாழ்வாருடன் இருக்கும் விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், நாகப்பாம்புடன் கூடிய விநாயகர் உள்ளிட்ட பலவித கலைநயத்துடன், பல்வேறு அவதாரங்களில் 3 அடி முதல் 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிலை வடிவமைக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், சேலம், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆர்டரின் பேரிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச்செல்கின்றனர்.

ஆண்டு முழுவதும் இந்த தொழில் தான் செய்து வருகிறோம். இதைவிட்டால் எங்களை போன்றவர்களுக்கு வேறு எந்த தொழிலும் கிடையாது. கிட்டத்தட்ட விவசாயம் போன்றது தான் இந்த தொழிலும். இந்த கைவினைதொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வழங்குவதுபோன்று இந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் எங்களை போன்ற கைவினை தொழிலாளர்களுக்கும் வங்கிகளில் கடன் உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரசு தனிக்கவனம் செலுத்தி எங்கள் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்