சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி - பக்தர்கள் குவிந்தனர்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடித்தபசு காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை காண பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2019-08-12 21:30 GMT
சங்கரன்கோவில், 

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

11-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடித்தபசு காட்சி நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விழா பூஜையும், காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை 6 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆடித்தபசு காட்சியை காண சங்கரன்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் கோவிலில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காந்திநகர் பொட்டல் மைதானத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பல இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோவில், நகரசபை நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்