வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-13 22:30 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள பாகாநத்தம், தோப்பூர் ஆகிய கிராமங் களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்தக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் ஆப்ரேட்டர் சரி வர தண்ணீர் எடுத்து விடாததால் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து பாகாநத்தம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பாகாநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் மலைப்பட்டியில் இருந்து வேடசந்தூர் செல்லும் அரசு பஸ் பாகாநத்தம் வந்தபோது பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட் டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சிறை பிடித்த அரசு பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்