சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர் மாநகரில் சுதந்திர தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியமர்த்தப்படுகிறார்கள்.

Update: 2019-08-13 23:30 GMT
திருப்பூர்,

சுதந்திர தின விழா நாளை(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அலுவலகம், தபால் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பு இன்று(புதன்கிழமை) முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மத வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மாநகரில் 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடத்தப்படுகிறது.

அதுபோல் திருப்பூர் ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் போலீசார் பயணிகள் கொண்டு வந்த பைகளை தீவிர சோதனை செய்த பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். மாநகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்கள் முக்கிய பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதுதவிர இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகரில் போலீஸ் கமி‌‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் 2 துணை கமி‌‌ஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமி‌‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 250 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பிலும் சுதந்திர தினத்தையொட்டி சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை இன்று முதல் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்