பவானிசாகர் அணை நீர்மட்டம் 93 அடியை தாண்டியது

பவானிசாகர் அணை நீர்மட்டம் 93 அடியை தாண்டியது.

Update: 2019-08-14 22:45 GMT
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால் வழியாக சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல்வேறு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

இது தவிர பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள யானை, மான் உள்ளிட்ட விலங்குகளும் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து தாகம் தணித்து செல்கின்றன.

இந்தநிலையில் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 58 அடிதான் இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்தது.

இதன்காரணமாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லை. விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த வாரம் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை நிற்காமல் பெய்தது. இதனால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. உடனே உபரிநீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 7,805 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 92.29 அடியாக இருந்தது.

நேற்று மாலை 3 மணி அளவில் தண்ணீர் வரத்து 3,249 அடியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 93 அடியை தாண்டியது.

பாசனத்துக்காக தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

மேலும் செய்திகள்