அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் அருங்காட்சியகம் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட அருங்காட்சிய கத்தினை தமிழக முதல்- அமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2019-08-14 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி கிராமத்தில் சுற்றுலா மற்றும் பண்பாட்டு மற்றும் அறநிலையத் துறையின் வாயிலாக கட்டப்பட்ட புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியக திறப்பு விழாயொட்டி அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா பேசியதாவது:-

அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கடலாக இருந்ததாகவும், அதற்குறிய சான்றுகள், மண், மலை முகடு, படிவங்கள் ஆகியவை அரிய வகை கற்படிவங்கள், பல வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட்டதை அறிந்த முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டார்.

வரலாற்று தகவல்கள்

அதன்படி அரசால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, இன்று (அதாவது நேற்று) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் மூலம் நம்முடைய எதிர்கால சந்ததியினர்களும், பள்ளி மாணவ- மாணவிகளும் உலகம் தோன்றிய வரலாறும், அறிய பல வரலாற்றுச்சுவடுகளும், அரியலூர் மாவட்டம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்ததற்கான தகவல்களையும் அறிந்துகொள்ள இயலும். தமிழக அரசு தொல்லியல் துறை மூலமாக இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டறிந்து அகல் ஆராய்ச்சி செய்து, உலகெங்கும் எடுத்துச்செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் புவியியல் பிரிவு காப்பாட்சியர் தனலெட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்