பலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

பலத்த மழையால் ரத்து செய்யப்பட்ட மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2019-08-14 22:45 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்தது. இதற்கிடையில் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாய நிலை காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளது. மேலும் மண்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் ஓரளவுக்கு உள்ளது.

இதன் காரணமாக பலத்த மழையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

நீலகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மலைரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பாதுகாப்பு கருதியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மலைரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டால், கடும் அவதிக்குள்ளாக நேரிடும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. தற்போது மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. மழை பெய்து உள்ளதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கும். மேலும் சாரல் மழை அவ்வப்போது பொழிகிறது. இது மலைரெயிலில் பயணிப்பவர்களின் மனதை வெகுவாக கவருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்