கம்பம் அருகே, ஓடை ஆக்கிரமிப்பை அகற்றாததால் வீணாகும் தண்ணீர்

கம்பம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றாததால் மழைக்காலத்தில் தண்ணீர் வீணாகி வருகிறது.;

Update:2019-08-15 04:15 IST
கம்பம்,

கம்பம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து ஓடைகள் வழியாக ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களுக்கு மழைக்காலத்தில் தண்ணீர் வந்து சேரும். அந்த குளங்கள் நிரம்பியவுடன் மற்றொரு ஓடை வழியாக, வீரப்பநாயக்கன்குளத்தை தண்ணீர் வந்தடைகிறது.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில், தண்ணீர் வரும் ஓடைகளின் குறுக்கே வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஆங்காங்கே தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கம்பம் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.

இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து தொடங்கும் ஓடைகளை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சில இடங்களில் ஓடைகள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் மறைந்து போய் விட்டது. மேலும் மழைக்காலத்தில் ஓடைகள் வழியாக வராமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வீணாக செல்கிறது.

எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஓடைகளை மீட்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கம்பம் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரப்பகுதியில் உள்ள ஓடைகளை மறித்து சிலர் பாதை அமைத்துள்ளனர். இதனால் குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றாமல், வேளாண்மை துறை சார்பில் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டினால் எந்த பயனும் இல்லை. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் தடுப்பணை மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அதிகாரிகள் அமைத்துள்ளனர் என்றனர்.

மேலும் செய்திகள்