வெனிசுலாவில் இருந்து சீனா புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா; அதிர்ச்சி சம்பவம்

வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.;

Update:2025-12-21 15:47 IST

வாஷிங்டன்,

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீதும் அமெரிக்கா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்காக கரீபியன் கடல் பரப்பில் வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதன் மூலம் வெனிசுலா மீது அமெரிக்கா எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும், வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெனிசுலா கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னதாக வெனிசுலாவை சேர்ந்த கச்சா எண்ணெய் கப்பலை கடந்த வாரம் அமெரிக்கா பறிமுதல் செய்தது.

இந்நிலையில், வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா நேற்று பறிமுதல் செய்துள்ளது. கரீபியன் கடல் வழியாக சென்ற அந்த கப்பலில் 18 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் செயலுக்கு வெனிசுலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்