பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற மக்கள் உறுதி ஏற்க வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்றுவதற்கு மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Update: 2019-08-14 22:47 GMT
ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா வரவேற்று பேசினார். முகாமில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மூலம் இது போன்ற மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்கம் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. குடிமராமத்து திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 522 குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. நேர்மையான முறையில் குடிமராமத்து பணி நடந்து வருகிறது. மழைக்காலத்துக்கு முன்பு இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் வீடுகளில் உள்ள தனிநபர் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. துணிப்பையை பயன்படுத்த வேண்டும். மக்கள் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ரகு நன்றி கூறினார்.

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்