சீனாவில் சூறாவளி புயல் தாக்குதல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

கனமழை மற்றும் கடுமையான புயல்கள், மாத இறுதி வரை தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சீன வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Update: 2024-04-28 02:14 GMT

பீஜிங்,

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் கடந்த 16-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பியர்ல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென்சீன பகுதியில் பல நாட்களாக பெய்து வந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 141 தொழிற்சாலை கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. எனினும் இதனால் குடியிருப்புகள் எதுவும் பாதிப்படையவில்லை. இந்த சூறாவளியால் 1.9 கோடி மக்கள் 3-ம் நிலை எச்சரிக்கையை எதிர்கொண்டு உள்ளனர்.

வெள்ளத்திற்கு 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், குவாங்சங் நகரை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி உள்ளது. இதனால், கோடிக்கணக்கிலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை போன்று சீனாவில் சூறாவளி புயல்கள் அதிக அளவில் ஏற்படுவது இல்லை. எனினும், சில சமயங்களில் சூறாவளி புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி செல்வதுண்டு. கடந்த 50 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சூறாவளி புயலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த சூறாவளி புயல், பலத்த வேகத்துடன் காற்று வீசி வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள கார்கள், வாகனங்கள் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்திற்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். 33 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த பகுதியில், மாத இறுதி வரை தொடர்ந்து கனமழை மற்றும் கடுமையான புயல்கள் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சீன வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்