மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு மத்திய நிதித்துறையின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது - நாராயணசாமி தகவல்

புதுவை மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு மத்திய நிதித்துறையின் ஒப்புதலை பெறவேண்டி உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-08-15 00:00 GMT
புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் 250 சதவீதமும், பிற மாணவர்களுக்கான கட்டணம் 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு தரும் கல்வி உதவித்தொகை கடந்த 2018-19ம் நிதியாண்டில் ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்தது. அதை தற்போது ரூ.2,936 கோடியாக குறைத்துவிட்டது.

இதனால் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை குறைத்திருப்பது அந்த சமுதாய மாணவ, மாணவிகளை வஞ்சிக்கும் செயல். இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் கடந்த காலங்களில் வழங்கியதுபோல் உயர்த்தி வழங்க கூறியுள்ளேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கொடுத்து வந்த சலுகைகளை படிப்படியாக குறைக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தை மக்களின் கருத்து கேட்காமல் 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்து உள்ளது. புதுவை போன்ற யூனியன் பிரதேசங்கள் மாநில அந்தஸ்து கேட்கும் நிலையில் காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி உள்ளது. இதனால் காஷ்மீரில் சகஜ நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசம் போன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் 239 ஏ அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு, அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை மத்திய அரசின் மேற்பார்வையில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்கள் நிதிக்குழுவில் சேர்க்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இதுவரை சேர்க்கப்படவில்லை. சட்டமன்றத்தை கொண்ட யூனியன் பிரதேசம் என்ற முறையில் அனைத்து அதிகாரமும் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும் கவர்னர் தலையீட்டால் ஒவ்வொன்றையும் போராடி பெறவேண்டி உள்ளது. அப்படியிருக்க தீவிரவாதம் கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் எப்படி வளர்ச்சி ஏற்படும். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

புதுவையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு அமைச்சரவை, மாநில திட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டு புதுவை பட்ஜெட் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய மந்திரிகள், செயலாளர்களுடன் பேசியுள்ளேன். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் நாம் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.

ஆனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருப்பவர்கள் இந்த அரசை குறை கூறுகிறார்கள். மத்திய அரசு ஒப்புதல் தராததால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் ஒப்புதல் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்த நிலையில் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள், கவர்னர் உரை, வாரியத் தலைவர்கள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

மேலும் செய்திகள்