அரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்

அரியலூரில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியேற்றினார்.

Update: 2019-08-15 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்கவிட்டு, காவல்துறையினர், பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் இதர படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருடன் கைத்தறி ஆடைகளை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 15 போலீஸ் துறையினருக்கும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 86 அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களை மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் 243 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 42 ஆயிரத்து 224 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

பின்னர் 6 பள்ளிகளை சார்ந்த மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் மரங்களை வளர்ப்போம், மனங்களை காப்போம் என்ற சோலை வனம் அமைப்பின் சார்பில் 5 நிமிடத்தில் 500 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் பெரியய்யா, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) பரிதாபானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், கல்வித்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மீனாட்சி ராமசாமி பள்ளியில்...

உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி தமிழ், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தாளாளர் எம்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மெரிட் கல்வியியல் கல்லூரி முதல்வர் தேவி, மெரிட் தமிழ் வழி பேராசிரியர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஆசைதம்பி, ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் பள்ளியின் உதவியாளர் கார்த்திக்ராஜா நன்றி கூறினார்.

இதேபோல் திருநல்லாசிரியர் ராமச்சந்திரா மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது. பள்ளியின் தாளாளர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.

ஆண்டிமடம்

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டிமடம் 4 ரோடு அருகில் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். இதற்கு வட்டார தலைவர் குடியரசு தலைமை தாங்கினார். திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கோத்தாரி சர்க்கரை தொழிற்சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு தொழிற்சாலையின் தலைமை அதிகாரி இளமுருகன் தலைமை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதேபோல் வேலாயுதநகர் சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி திருமணி தேசிய கொடியேற்றி வைத்தார். நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபிரியன் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்தார். ஜெயங்கொண்டம் 4 ரோடு நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக 4 ரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதேபோல் தனியார் கார், வேன், மோட்டார் சங்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்...

உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராஜ்குமார் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மாவட்ட தலைவர் டாக்டர் ஜெயராமன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கங்காதேவி தலைமையில் கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்