கோவையில் போலீசார் அதிரடி: கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

கோவையில் கஞ்சா விற்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-15 22:00 GMT
கோவை,

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பிரபு மற்றும் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியில் மேலும் 4 பேர் கஞ்சா விற்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 4 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் புலியகுளம் அம்மன்குளத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 23), நவீன்குமார்(23), கவுசிக் (22), மாரிமுத்து (20), விக்ரம் (19) என்பதும், இவர்கள் 5 பேரும் ஒரு கும்பலிடம் இருந்து கஞ்சா வாங்கி அதை சிறு சிறு பொட்டலங்களாக போட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மேலும் போலீசார் கூறியதாவது:-

கைதானவர்கள் கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.

அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கஞ்சா விற்றுள்ளனர். மொத்தமாக வாங்கி 10 கிராம், 20 கிராம் என்று கஞ்சா பொட்டலங்களை தீப்பெட்டிகளில் மறைத்து விற்பனை செய்துள்ளனர். போலீசார் சோதனை செய்தாலும் தீப்பெட்டி தானே என்று கருதி விட்டு விடுவார்கள். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக இந்த தந்திரத்தை கஞ்சா ஆசாமிகள் கையாண்டு உள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். கைதான 5 பேருக்கும் கஞ்சா கொடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்