விருதுநகரில் பரபரப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - காசோலையை வைத்து மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு

விருதுநகரில் வியாபாரி, அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கையெழுத்திட்ட காசோலையை வைத்து மிரட்டியதாக தரகர் உள்பட அவருடைய குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

Update: 2019-11-11 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் இன்பமூர்த்தி(வயது 69). மல்லி, வத்தல் மொத்த வியாபாரம் செய்து வந்த இவர், மல்லி மூர்த்தி என்றும் அழைக்கப்பட்டார். அவருடைய மனைவி திலகவதி (63), மகன் கண்ணன் (40).

கண்ணனுக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் காயத்ரி சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக குழந்தையுடன் சென்று இருந்தார்.

இந்தநிலையில் இன்பமூர்த்தி தனது மனைவி திலகவதி, மகன் கண்ணனுடன் விருதுநகர் அருகே பெரியவள்ளிகுளத்தில் உள்ள அவரது கிட்டங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வு அறையில் 3 பேரும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை மல்லி கிட்டங்கிக்கு சென்ற ஊழியர்கள் அங்கு மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அங்கு சென்று பார்த்தனர். அங்கு இன்பமூர்த்தி, திலகவதி, கண்ணன் ஆகியோர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக அவர்கள் 3 பேரையும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர் பரிசோதித்தபோது, இன்பமூர்த்தி, கண்ணன் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. திலகவதியின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்தது தெரியவந்ததால், அவரை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே திலகவதியும் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் விருதுநகர் சூலக்கரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து இன்பமூர்த்தியின் சகோதரர் புகழ்ராஜ் (65) போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:

விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் மாணிக்கவேல். இவர் மல்லி வியாபார தரகராக உள்ளார். அவரும், அவருடைய மனைவி சொர்ணலதா, தந்தை சங்கரபாண்டியன், தாய் சுசிலா ஆகியோர் மல்லியை கொள்முதல் செய்து இன்பமூர்த்திக்கு கொடுத்து வந்துள்ளனர். இதற்காக இன்பமூர்த்தி அவர்களிடம் தனது கையெழுத்திட்ட காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் மாணிக்கவேல் இந்த காசோலையை வைத்து மோசடி செய்ததாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்பமூர்த்தி மிகுந்த மனஉளைச்சல் அடைந்தார்.

இதுகுறித்து இன்பமூர்த்தி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இன்பமூர்த்தி, தனது மனைவி, மகனுடன் மல்லி கிட்டங்கிக்கு சென்று அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணிக்கவேல், அவருடைய மனைவி சொர்ணலதா, தந்தை சங்கரபாண்டியன், தாய் சுசிலா ஆகிய 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, தற்கொலைக்கு தூண்டுதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வியாபாரி இன்பமூர்த்தி எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் மாணிக்கவேல் உள்பட 4 பேர் கொடுத்த மிரட்டல் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து இருப்பதாக போலீசார் கூறினர்.

இன்பமூர்த்தி மற்றும் அவரது மனைவி, மகன் தற்கொலை செய்த சம்பவம் விருதுநகர் வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்