கோவில் கட்டும் பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை பதற்றம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு

திருமானூர் அருகே கோவில் கட்டும் பிரச்சினையில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-11-12 23:15 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொறதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 45). விவசாயியான இவருக்கு ரஞ்சிதம் (32) என்ற மனைவியும், அனுசியா (15) என்ற மகளும், விக்னேஷ் (14), விக்கி (10) என 2 மகன்களும் உள்ளனர். இவர் நேற்று காலை 9 மணி அளவில் அரியலூர் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆங்கியனூரில் இருந்து பூண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காட்டுப்பாதையின் இடையே மர்ம நபர்கள் சிலர் அரிவாள் மற்றும் கத்தியுடன் அவரை வழிமறித்துள்ளனர்.

இதைக்கண்ட விஸ்வநாதன் அதிர்ச்சியடைந்து வண்டியை கீழே போட்டுவிட்டு சாலையைவிட்டு கீழே இறங்கி ஓட தொடங்கியுள்ளார். உடனே மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று முதுகு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியே சென்றவர்கள் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில் கட்டுவதற்கான பணி

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் கீழப்பழுவூர் போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த நிலையில் தகவல் அறிந்த விஸ்வநாதனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொறதக்குடி கிராமத்தில் முத்தையன் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது.

கோவில் கட்டுவதற்கான பணிகளை விஸ்வநாதன் எடுத்து நடத்தி வந்தார். அப்போது ஒரே சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டு இரு பிரிவுகளாக பிரிந்து கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு பிரிவினரும், கோவில் கட்டக்கூடாது என மற்றொரு பிரிவினரும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையால் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

பரபரப்பு

கோவில் கட்டுவது குறித்து கடந்த ஆண்டுகளில் 2 பிரிவினருக்கும் இடையே பலமுறை அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டும் எந்த பலனும் இல்லை. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை பெரியதாகி கொண்டே தான் இருந்திருக்கிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோர்ட்டில் நடந்துவந்த இந்த வழக்கில் விஸ்வநாதன் பிரிவினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதுகுறித்த ஆவணங்களை வாங்க அரியலூர் கோர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கூறுகையில், கோர்ட்டு ஆவணங்களை வாங்க விஸ்வநாதன் சென்றதை அறிந்த மற்றொரு பிரிவினரே ஆத்திரத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம், என்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்த தரப்பை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டதை யடுத்துஅப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்