நாகர்கோவில் அ.தி.மு.க. அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் - தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகத்தை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-15 22:15 GMT
நாகர்கோவில், 

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

இதற்காக குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம், இலக்கிய அணி இணைச் செயலாளர் சதாசிவம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு விருப்ப மனுக்களை தளவாய் சுந்தரம் வினியோகம் செய்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், தளவாய் சுந்தரத்திடம் வழங்கினார். இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜன், நகர செயலாளர் சந்துரு, மகளிரணி முன்னாள் மாவட்ட செயலாளர் டாரதி சாம்சன் உள்ளிட்டோரும் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

மேலும் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், நகரசபை தலைவர், நகரசபை கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் ஏராளமானோர் போட்டியிட அந்தந்த பதவிகளுக்கான கட்டண தொகையை செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பலர் திரும்ப தாக்கல் செய்தனர். இதனால் நேற்று காலையில் இருந்து மாலை வரை நாகர்கோவிலில் உள்ள கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

நிகழ்ச்சியில் சதாசிவம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், அணி செயலாளர்கள் மனோகரன், ஜெயசீலன், சுகுமாரன், பொன்.சுந்தர்நாத், நிர்வாகிகள் சுந்தரம், ஜெயகோபால், லதா ராமச்சந்திரன், வேலாயுதம், சதானந்தன், விக்ரமன், பாக்கியலட்சுமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்