தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர ஓட்டலில் லாரி புகுந்து விபத்துக்குள்ளானதில் புரோட்டா மாஸ்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Update: 2019-11-18 23:00 GMT
பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருங்காட்டு கோட்டை சர்வீஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அரபன்ஷா (வயது 30) என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஓட்டல் உரிமையாளர் அன்பரசு, அவரது தந்தை ஏல்லப்பன், மனைவி கீதா, 2 மகன்கள் ஆகியோர் ஓட்டல் முன்பு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். ஓட்டல் ஊழியர் அரபன்ஷா புரோட்டாவுக்கு மாவு தயாரித்து கொண்டு இருந்தார்.

அப்போது பூந்தமல்லியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சுங்குவார் சத்திரம் நோக்கி கோதுமை ஏற்றி சென்ற சரக்கு லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதியது. மேலும் இதில் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய லாரி சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி தறி கெட்டு ஓடிவருவதை கண்ட ஓட்டல் உரிமையாளர் அன்பரசு மற்றும் குடும்பத்தினர் தப்பித்து ஓடினர்.

அதன்பின்னர் லாரி மோதியதில் ஓட்டல் மேற்கூரை சரிந்தது. சரித்து விழுந்த மேற்கூரையில் இருந்த மின்சாரம் தாக்கி புரோட்டா மாஸ்டர் அரபன்ஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.

அப்போது இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அரபன்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்