கலெக்டரை அவதூறாக விமர்சனம் செய்ததாக புகார்: திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி மீது வழக்கு

கலெக்டர் உமா மகேஸ்வரியை அவதூறாக விமர்சனம் செய்த புகாரில், திருமயம் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-11-19 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி டிரைவர் காலனியை சேர்ந்தவர் ஷேக் திவான். இவர் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 17-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி, அரசு நிகழ்ச்சியில் கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்ற நிகழ்வை குறிப்பிட்டு, கலெக்டர் உமா மகேஸ்வரி அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் போல் செயல்படுகிறார் என அவதூறாக கூறியுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, ரகுபதி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், அரசு அதிகாரியை விமர்சனம் செய்தல், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ், திருமயம் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

கலெக்டர் உமா மகேஸ்வரியை விமர்சனம் செய்ததாக தி.மு.க. எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்