மீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்கள் விவசாயிகள் கவலை

மீன்சுருட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகி வரும் பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-11-19 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மீன்சுருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பாகல்மேடு, சத்திரம், முத்துசேர்வாமடம், வெண்ணங்குழி, அய்யப்பநாயகன் பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் முக்கிய தொழில் தங்களது விவசாய நிலத்தில் நெற்பயிர்களை பயிர் செய்து, அதில் இருந்து கிடைக்கும் நெல்லை பாதி அளவு விற்றும், மீதம் உள்ள நெல்லை உணவுக்கும் வைத்து வருகின்றனர். மேலும் அன்றாட பிழைப்புக்காக விவசாய நிலத்தில் இருந்து கிடைக்கும் வைக்கோலை கொண்டு, மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

வழக்கம்போல இந்த ஆண்டு பருவமழையை நம்பி மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் மானாவாரி பயிர்களை பயிர் செய்தனர். இந்நிலையில் பருவமழை பொய்த்துப்போனது. மேலும் ஏரி, குளம், குட்டை, ஆழ்குழாய் கிணறுகள், விவசாய கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள அனைத்து பயிர்களும் கருகும் நிலையில் உள்ளன. இதனை தினமும் பார்க்கும் விவசாயிகள் இனி தாங்கள் எப்படி வாழ்வது என்ற கவலையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

உரிய நடவடிக்கை

நாங்கள் பருவமழையை நம்பி எங்களது விவசாய நிலத்தில் சாகுபடியில் இறங்கினோம். ஆனால் பருவமழை பொய்த்து போனதால் தற்போது பயிர்கள் அனைத்து கருகி வருகின்றன. கடன் வாங்கி பயிர் செய்தோம். தற்போது அந்த கடனை எப்படி செலுத்தப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து எங்களுக்கு (விவசாயிகள்) உதவ வேண்டும். மேலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். அப்போதுதான் மழைநீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

மேலும் செய்திகள்