சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் சஸ்பெண்டு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Update: 2019-11-19 22:45 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி லதா(வயது 51). இவர் காட்டுமன்னார்கோவில் ஆயங்குடி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 16-ந்தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது அங்கு இருந்த தர்‌‌ஷன் என்கிற நடராஜ தீட்சிதர், லதாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக லதா சிதம்பரம் நகர போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்‌‌ஷனை தேடி வருகின்றனர். மேலும் அவரை உடனடியாக கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சங்கத்தினர் போராட்டத்தையும் நடத்தினர்.

சஸ்பெண்டு

இந்த சூழ்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் நிர்வாக அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் பாலகணேசன், லதாவை தாக்கிய தீட்சிதர் தர்‌‌ஷன் 3 மாதங்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதாகவும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

இதன் மூலம் அவர் கோவில் பூஜை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார் என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பானது தான். அவரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்