ஆரணி காந்தி ரோட்டில் விபத்துகளை தவிர்க்க: `சென்டர் மீடியன்' அமைப்பது அவசியம் ஆக்கிரமிப்பை அகற்றவும் - அமைச்சர் உறுதி

ஆரணி காந்தி ரோட்டில் விபத்துகளை தவிர்க்க `சென்டர்மீடியன்' அமைப்பது அவசியம் என எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2019-11-21 22:45 GMT
ஆரணி,

ஆரணி காந்தி ரோட்டில் வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. பகல், இரவு என எந்த நேரமும் இந்த பகுதி போக்குவரத்து இடையூறில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களாலும் பிரச்சினைகள் உள்ளன. இந்த நிலையில் விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்.சிலை வரை சாலையின் மையத்தில் `சென்டர் மீடியன்' அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஆரணிப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருகின்றனர். புதிய வாகனம் வாங்குபவர்கள் அங்கு பூஜை செய்தபின்னர்தான் அதனை ஓட்ட தொடங்குகின்றனர். இவ்வாறு அதிக வாகனங்களுக்கு பூஜை நடத்தப்படுவதால் நெரிசல் ஏற்படும் எனக்கூறி சென்டர் மீடியன் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை அங்கு திரண்டனர்.

அப்போது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வழியாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் காரில் வந்து கொண்டிருந்தார். பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால் காரை விட்டு அவர் கீழே இறங்கி விசாரித்தார்.

எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அவர் சமரசம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சென்டர் மீடியன்' அவசியம் தேவை, விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதால்தான் அதனை தவிர்ப்பதற்காக ‘சென்டர்மீடியன்' அமைக்கப்படுகிறது.

குறுகிய பாதை என்பதால் உடனடியாக இங்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாரியம்மன் கோவில் முன்பாக 10 அடி நீளத்திற்கு மட்டும் சென்டர்மீடியன் அமைக்காமல் விடப்பட்டு மற்ற இடங்களில் தொடர்ச்சியாக போடப்படும்’’ என்றார்.

‘சென்டர்மீடியன்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 தினங்களுக்கு முன்பு இரவு மனித சங்கிலி போராட்டமும் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களையும் அழைத்து இந்த கருத்துகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் கருணாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் பலர் இருந்தனர். இதனையடுத்து உறுதிமொழியளித்தபடி சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான முதல் கட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர். அதன்படி இருபுறமும் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எல்லைக்கோடுகளை வரையறுத்தனர்.

மேலும் செய்திகள்