ரசாயனம் கலந்து பழுக்க வைப்பதால் வாழைத்தார்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் குற்றச்சாட்டு

வாழைத்தார்கள் ரசாயனம் கலந்து பழுக்க வைப்பதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2019-11-22 22:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், கொத்தமங்கலம், புள்ளாண்விடுதி, கருக்காக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாக அறுவடைக்கு வருவதால் விவசாயிகள் மொத்தமாக பணம் பார்க்க முடிந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக வாழை தார்களை கமிஷன் கடைகளில் வாங்க மறுத்து வருவதாலும், குறைந்த விலைக்கு வாங்குவதாலும் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு வாழை மரத்திற்கு குறைந்தது ரூ. 150 வரை செலவு செய்யப்படும் நிலையில், ஒரு வாழைத்தார் ரூ.50 முதல் 100 வரை விற்பனை செய்யப் படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கீரமங்கலம், வடகாடு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் வாழைத்தார்கள் சென்னை, கோவை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களை பயன்படுத்தி வாழை உற்பத்தி செய்யப்படுவதால் இப்பகுதி காய், கனிகளுக்கு எப்பவும் தனி இடம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வியாபாரிகள் உடனடியாக பழம் வேண்டும் என்பதற்காகவும், பல நாட்கள் கெடாமல் பளிச்சென்று கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வாழைக் காய்களில் ரசாயன கலவைகளை தெளித்து சில மணி நேரத்தில் பழம் பழுக்க வைக்கிறார்கள்.

இதனால் அந்த பழங்களை வாங்கிச் சாப்பிடும் மக்களுக்கு குடல் சம்பந்தமான நோய்கள் வருவதால் படிப்படியாக வாழைப் பழங்கள் சாப்பிடுவதை மக்கள் குறைக்க தொடங்கி விட்டனர். இதனால் தற்போது வாழைத்தார்களின் விற்பனை விலையும் குறைந்து விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதுடன் விவசாயிகள் வாங்கிய கடன்களை கூட திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் சமூக வலை தளங்களில் வாழைக்காய்களில் ரசாயனக் கலவைகள் தெளிப்பது போன்ற வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. அதனால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் சாப்பிடும் பழங்களில் ரசாயனக் கலவைகள் தெளிக்கப்படுவதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்