வயநாட்டில் மாவோயிஸ்ட் - அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு

தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

Update: 2024-04-30 09:23 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்பட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி பரபரப்பாக பேசப்படும் பகுதியாக உள்ளது. இதற்கு காரணம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-வது முறையாக போட்டியிடுவதுதான்.இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. அவர்களை தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வயநாடு தொகுதிக்கு 4 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்தனர்.அவர்கள், அங்குள்ள மக்களிடம் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் கண்காணிப்பையும் மீறி, மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் ஊருக்குள் வந்து மிரட்டல் விடுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாவோயிஸ்டுகள் குறித்த வீடியோவில் துப்பாக்கியுடன் வந்த 4 பேரின் முகங்கள் தெளிவாக இருந்தன. அதனை வைத்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில் இன்று பகல் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும், மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.இதனை தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி சுட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்ட்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் இல்லை எனவும் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தப்பியோடிய மாவோயிஸ்டுகளை கம்பமலை பகுதியில் தண்டர்போல்ட் அதிரடிப் படையினர் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்