அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Update: 2024-04-30 09:17 GMT

சனா,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. அதேபோல், ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது.

மேலும், செங்கடல், இந்திய பெருங்கடல்களில் பயணிக்கும் இஸ்ரேல் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2 அமெரிக்க போர் கப்பல்கள், சரக்கு கப்பல் என மொத்தம் 3 கப்பல்கள் மீது இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்