அரசியலமைப்பை நாங்கள் மாற்றுவோமா..? காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது: அமித் ஷா குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற ஒரு நாட்டில், மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருப்பது சரியல்ல, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அமித் ஷா கூறினார்.

Update: 2024-04-30 09:21 GMT

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்துறை மந்திரி அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் என காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்புகிறது. வாக்காளர்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. மக்களின் ஆதரவுடன் 400-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் இலக்கை நோக்கி பா.ஜ.க. சென்று கொண்டிருக்கிறது. அசாமில் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருப்பது சரியல்ல, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டு வருவோம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

இடஒதுக்கீடு குறித்து நான் பேசியதாக சமூக வலைத்தளங்களில் போலி வீடியோ பரப்பப்பட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

தென் மாநிலங்களில் கள நிலவரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, தென் மாநில வாக்காளர்களிடம் பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறினார்.

பேட்டியின்போது அமித் ஷாவுடன் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில பா.ஜ.க. தலைவர் பாபேஷ் கலிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்