கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2019-11-30 23:15 GMT
கன்னியாகுமரி,

சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் சுழற்சி முறையில் கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் பிரபாகரன் (வயது 57). இவர் சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளையை சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா்.

சாவு

நேற்று காலையில் காட்சி கோபுரம் பகுதியில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்த்தனர். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பிரபாகரன் இறந்த தகவல் அவரது குடுப்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதறி அழுதனர்.

மேலும் செய்திகள்