அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது.

Update: 2019-12-01 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி அனைத்துத்துறை அலுவலர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் உதவி கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர் களைக் கொண்ட மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை மின்சார வாரியம் கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும். மேலும் வட கிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தினை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04329-228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு பேரிடர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் (பொறுப்பு) பாலாஜி (அரியலூர்), பூங்கோதை (உடையார்பாளையம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, தாசில்தார் முத்துலட்சுமி (பேரிடர் மேலாண்மை) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்