வாழைப்பந்தலை சேர்ந்த தொழிலாளி துப்பாக்கி முனையில் கடத்தி கொலை - சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 10 பேர் கைது

துப்பாக்கி முனையில் தொழிலாளியை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கார்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-12-02 13:15 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள தட்டச்சேரி கிராம காலனி, மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி தேவகி. இவர்களது மகன் கிருஷ்ணன். முருகன் தனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னர் தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் தனது மனைவி, மகனுடன் சென்னை தாம்பரம் பகுதிக்கு சென்று அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மகனுடன் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அதிக அளவில் செலவு செய்து, மது குடித்து வந்ததாக தெரிகிறது. மேலும் முருகன் குடிபோதையில் தனக்கு கருப்பு நிற பை ஒன்று கிடைத்ததாகவும், அதில் பணம் இருந்ததாகவும் அதை செலவு செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதை நோட்ட மிட்ட மர்ம கும்பல் ஒன்று கடந்த 23-ந் தேதி முருகனின் வீட்டிற்கு சென்று பணப் பை குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு, போலி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனிடம் பணப்பையை எடுத்து தர கூறி அவரை கடத்திச் சென்று தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வைத்து இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளால் தாக்கியுள்ளனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து அந்த கும்பல் முருகனின் மனைவி தேவகி, மகன் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து கொண்டு முருகனின் உடலை காரில் வைத்து சொந்த ஊரான தட்டச்சேரி காலனி பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 2 பேரையும் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணன் வாழைப்பந்தல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த புருசோத்தமன் (31), குமார் (37), அருண்பாண்டியன் (32), பாரதி (40), எழில்குமார் (32), சேகர் (29), கந்தன் (38), சேட்டு என்கிற முனியாண்டி (36), ஜானகிராமன் (39), விக்னேஷ் (24) ஆகிய 10 பேரை நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்த 4 கார்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருண்பாண்டியனின் தந்தை கன்னியப்பன் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்